சாக்ஸபோன் இசைக் கலைஞர் `பத்மஸ்ரீ’ கத்ரி கோபால்நாத் காலமானார்!

சாக்ஸபோன் இசைக் கலைஞர் `பத்மஸ்ரீ’ கத்ரி கோபால்நாத் காலமானார்!

புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பத்மஸ்ரீ கத்ரி கோபால்நாத் இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். சாக்ஸபோன் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது இவரது பெயராகத்தான் இருக்கும்.

கத்ரி கோபால்நாத் 1949 ஆம் ஆண்டு மங்களூர் நகரத்தில் தனியப்பா, கங்கம்மா தம்பதியருக்கு பிறந்தவர். கோபால்நாத்தின் தந்தை ஒரு நாதசுவரக் கலைஞர். ஒருமுறை மைசூர் அரண்மனையில் இசைக்குழு ஒன்று சாக்சபோனை வாசித்தபோது, கத்ரி கோபால்நாத் அந்த இசையால் ஈர்க்கப்பட்டார். மேலைநாட்டு காற்றுக் கருவியான சாக்சபோனைக் கற்றுத் தேர்ந்து ஒரு சிறந்த கலைஞனாக வேண்டும் என ஆசை கொண்டார். மங்களூரின் கலாநிகேதனாவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ண ஐயரிடமிருந்து சாக்சபோன் வாசிப்பதைக் கற்றார் கத்ரி கோபால்நாத். பிறகு சென்னையில் பிரபல மிருதங்க இசைக் கலைஞர் டி. வி. கோபாலகிருஷ்ணனிடம் இசைப்பயிற்சி பெற்றார்.

கத்ரி கோபால்நாத் தனது முதலாவது இசை நிகழ்ச்சியை செம்பை நினைவு அறக்கட்டளையில் நிகழ்த்தினார். அதன்பிறகு 1980 ஆம் ஆண்டு நடந்த ‘பாம்பே ஜாஸ் இசைவிழா’ இவரின் இசை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கலிபோர்னியாவிலிருந்து வந்திருந்த ஜான் ஹன்டி எனும் ஜாஸ் இசைக் கலைஞர், கத்ரி கோபால்நாத்தின் இசையால் ஈர்க்கப்பட்டு இருவரும் இணைந்து இசை வழங்க விரும்பினார். ஜாஸ்சும் கர்நாடக இசையும் கலந்த இசைக்கோர்வை, இசை நேயர்களை பெரிதும் கவர்ந்தது.

பராகுவேயில் நடந்த ‘ஜாஸ் இசைவிழா’, ஜெர்மனியில் நடந்த ‘பெர்லின் ஜாஸ் இசைவிழா’, மெக்சிகோவில் நடந்த அனைத்துலக செர்வான்டினோ இசைவிழா (International Cervantino Festival), பிரான்சின் பாரிசில் நடந்த ‘இசையரங்க இசைவிழா’ என நிகழ்ச்சிகளில் பங்குகொண்டார்.

தமிழ்த் திரைப்பட இயக்குனர் கே. பாலச்சந்தரின் முயற்சியால் ‘டூயட்’ எனும் தமிழ் திரைப்படத்தில் கத்ரி கோபால்நாத், ஏ. ஆர். ரகுமானுடன் இணைந்து பணியாற்றினார். அனைத்துப் பாடல்களிலும் சாக்சபோன் இசை பயன்படுத்தப்பட்டது; அப்பாடல்களில் பெரும்பாலும் ‘கல்யாண வசந்தம்’ எனும் இராகம் பயன்படுத்தப்பட்டது. நேர்காணல் ஒன்றில் பேசிய கத்ரி கோபால்நாத், “ஏ.ஆர். ரகுமானுக்கு சுமார் 30 இராகங்களை வாசித்துக் காட்டினேன். அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. கடைசியாக கல்யாண வசந்தம் வாசித்ததும் ‘இதுதான்’ என ஏ.ஆர். ரகுமான் மகிழ்ந்தார். இந்தப் படத்துக்குப் பிறகு எனக்குக் கிடைத்த வரவேற்பு என்னைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியது” என்று கூறியுள்ளார்.

லண்டன் பிபிசி நடத்தும் ‘உல்லாசவீதி’ (BBC Promenade) எனும் இசைவிழாவில் 1994ஆம் ஆண்டு தனது இசையை வழங்கினார். பிபிசி நடத்தும் இசைவிழாவிற்கு அழைக்கப்பட்ட முதல் கர்நாடக இசைக் கலைஞர் எனும் பெருமை இவருக்குக் கிடைத்தது.

பிரபல கர்நாடக இசைப் பாடகர் செம்மங்குடி சீனிவாச ஐயர், கத்ரி கோபால்நாத்தை ‘மெய்யான கர்நாடக இசை மேதை’ என பாராட்டியிருந்தார்.

கர்நாடக இசை மேதை சாக்சபோன் இசை கலைஞர் பத்மஸ்ரீ கத்ரி கோபால்நாத் அவர்களின் மறைவு இசைத்துறைக்கு ஒரு மாபெரும் இழப்பு. அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

இவண்

லஷ்மன் ஸ்ருதி

Profile of Kadri Gopalnath

Kadri Gopalnath Photo Gallery
Gallery 1 | Gallery 2 | Gallery 3